கல்வித் தகுதி; CID க்கு சென்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

Sulokshi
Report this article
தனது கல்வித் தகுதி தொடர்பான பிழையான தரவுகள் பாராளுமன்ற தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் கல்வித் தகைமைகள் தொடர்பான விவரங்கள் நாடாளுமன்ற இணையத்தளத்தில் தவறாக பதிவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கேள்வி அரசுக்குக் கிடைத்த வெற்றி
நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால், உரிய தரவுகளை உள்ளீடு செய்வதில் ஏற்பட்ட பிழை காரணமாக, கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்க எம்.பி.க்களின் கல்வித் தகுதி தொடர்பான அண்மைக்கால சர்ச்சைகளை கருத்தில் கொண்டு, இது தனிப்பட்ட சம்பவமாகத் தெரியவில்லை எனக் கூறிய அமைச்சர் நாணயக்கார, இவ்வாறான பிழையான தரவுகள் எவ்வாறு உள்ளிடப்பட்டன என்பதைக் கண்டறிவது அவசியமானது என இன்று(16) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக வெளியான பல்வேறு ஊடகச் செய்திகளால் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதம் குறித்து சிவில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் தொடர்பான சரியான கேள்விகளை பொதுமக்கள் கேட்க ஆரம்பித்துள்ளமை குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியடைவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை "முன்னதாக, ஒரு எம்.பி எதனோல் (ethanol) அல்லது போதைப்பொருள் விற்கிறாரா, அல்லது தண்டனை பெற்ற ஒருவர் எப்படி எம்.பி.யாக நியமிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினர்.
அல்லது பார் பர்மிட் பற்றிய விவாதங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது எம்.பி.க்களின் கல்வித் தகுதி குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது NPP கொண்டு வந்த மாற்றம். இந்த மாற்றம் மட்டுமே அரசுக்குக் கிடைத்த வெற்றி என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார்.