புத்தளத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் அதிரடி கைது!
நாட்டில் பாதுகாக்கப்பட்ட செல லிஹினாயா (Grackle) இனத்தைச் சேர்ந்த 3 பறவைகளை இரகசியமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாராகவிருந்த இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக புத்தளம் மாவட்ட வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தளம் - களப்பு பகுதியில் வசித்து வரும் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மலைப்பகுதியில் உள்ள மலைகள் மற்றும் உலர் வலயத்தின் பல்வேறு இடங்களுக்கு அருகில் சுற்றித் திரியும் பாதுகாக்கப்பட்ட பறவைகளே இவ்வாறு பிடிக்கப்பட்டு கூடுகளுக்குள் அடைத்து தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அக்குறணை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இருந்து குறித்த பாதுகாக்கப்பட்ட பறவைகள் பிடிக்கப்பட்டு, பின் அந்த பறவைகளின் வாழ்க்கை முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு நாடு பூராகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதுகாக்கப்பட்ட பறவைகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து புத்தளம் மாவட்ட வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.