தீக்காயங்களுக்குள்ளான வயோதிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
புத்தளம் மாவட்டத்தில் முந்தல் – பெருக்குவற்றான் கிராம சேவகர் பிரிவு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டமொன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
67 வயதுடைய முந்தல் பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவரே இன்றைய தினம் (20-05-2022) இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பகுதியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினர், முந்தல் – பெருக்குவற்றான் கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றில் வசித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை குறித்த வயோதிப பெண் சமயலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த கோது திடீரென அவரது உடலில் தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தீப்பரவலுக்கு உள்ளாகிய நிலையில் இருந்த குறித்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர்.
இச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உடப்பு பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.