புத்தளத்தில் இன்றைய தினம் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு: மக்கள் விசனம்
புத்தளம் மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் (30-08-2022) மாலை முதல் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதாக மக்கள் விசனத்தை வெளியிட்டுள்ளார்.
இன்று மாலை 5 மணி முதல் மணித்தியாலத்திற்கு பல முறை இவ்வாறு மின்சாரம் தடைப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் வீட்டிலுள்ள மின்குமிழ் மாத்திரமின்றி, இலத்திரனியல் உபகரணங்களும் பழுதடையும் நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புத்தளத்தில் இன்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மின்மாற்றி உட்பட மின்கம்பங்களில் பழுது ஏற்படுவதால் இவ்வாறு அடிக்கடி மின்சாரத் தடங்கள் ஏற்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் மதுரங்குளி அலுவலகத்தின் கடமை நேர அதிகாரியொருவர் சமூகம் மீடியாவுக்குத் தெரிவித்துள்ளார்.
அதாவது, தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால், மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களில் பழுது பார்ப்பது கடினமாக உள்ள போதிலும் மின்சார சபை ஊழியர்கள் களப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில் இன்று மாலை முதல் தற்போது வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.