மோசமடையும் காலநிலை ; நீரில் மூழ்கிய புத்தளம் நகரம் ; 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 1113 குடும்பங்களைச் சேர்ந்த 3475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த அழுத்தப் பிரதேசம்
இதேவேளை 40 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1310 பேர் 8 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1264 நபர்கள் 6 பாதுகாப்பு முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிக்கிறது. அடுத்த 36 மணித்தியாலங்களில் (நேற்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல்) இந்த அமைப்பானது இலங்கையை விட்டு நகர்ந்து, படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.