தமிழர் பகுதியொன்றில் இறைச்சிக்காக சிறிய கன்றுகள் வெட்டப்படுகின்றதா?
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளில் முறைகேடு இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதிகளில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே வெட்டுவதற்கு அனுமதிக்கப்படுகின்றதாகவும், அவற்றில் சிறிய கன்றுகளையும் இறைச்சிக்கு வெட்டுவதற்கு அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றிருந்தது.
இதனையடுத்து இவ் விடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை செயலாளர் ச.கிருஷாந்தனிடம் வினவியபோது,
இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டுவரப்படும் மாடுகள் 24 மணித்தியாலயம் பிரதேச சபையில் கட்டப்பட்டு அவற்றை புதுக்குடியிருப்பு சுகாதார பணிமனை சுகாதார பரிசோதகர்கள், கால்நடை வைத்தியர் பார்வையிட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இறைச்சிக்கு வெட்டப்படுகின்றதாகவும், பார்ப்பதற்கு கன்று போல் தெரிந்தாலும் மாட்டின் பல்லை வைத்தே வயது உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார பரிசோதகரிடம் வினவியபோது 5 மாடு பிரதேச சபையில் கட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் இரண்டு மாடுகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.