புத்தளம் மக்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரைப் பூங்கா எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் பாவனைக்குத் தடை செய்யப்படுவதாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம் ரபீக் தெரிவித்தார்.
நேற்று முதல் இது அமுலுக்கு வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதிகரித்துச் செல்லும் கொரோனா அலை காரணமாக, அடுத்து வரும் வாரங்களில் நெருக்கடியான நிலை ஏற்படலாம் என்றும் தற்போதைய டெல்டா வைரசின் பரவல் காரணமாக இலங்கை மிக மோசமான மருத்துவ அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும், அவர் கூறினார். அத்துடன், பொதுமக்கள் ஒன்று கூடல்களைத் தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளுக்காக முகக் கவசம், சமூக இடைவெளி பேணி சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வெளியே வருகை தருமாறும் புத்தளம் நகர எம்.எஸ்.எம் ரபீக் கேட்டுள்ளார்.