அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழியும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் இன்று (07) அதிவிசேட வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.

மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை எட்டும் போது அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது ஓய்வுபெற வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை தற்போதைய 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் தொடர்பான அடுத்தகட்ட அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளின் பின்னரே இம்மாற்றங்கள் அமுலுக்கு வரும்.