சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; வீடியோவை பகிர்ந்த கும்பலுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி
பீகார் மாநிலம் ஜமுய் நகரில் உள்ள பாடசாலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுவனும் சிறுமியும், தங்களது பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மட்வா பஹாட் பகுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் நின்றிருந்த ஒரு கும்பல் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

சிறுவர்களிடம் விசாரணை
அக்கும்பல் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி, வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கித் துன்புறுத்தியுள்ளது.
அச்சமயம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறுவர்களு பின்னால் துரத்திச் சென்று, கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்தை அக்கும்பலை சேர்ந்த ஒருவன் தனது கைபேசியில் வீடியோ படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளான்.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் சிறுவனின் சட்டையைப் பிடித்து இழுப்பதும், அச்சிறுவன் சிறுமியின் உதவியோடு தப்பிக்க முயற்சிப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும், மற்றொரு நபர் சிறுமியின் கழுத்தைப் பிடித்து தூக்கிச் செல்ல முயன்றபோது, அச்சிறுவன் குறுக்கிட்டுத் தடுத்துள்ளான்.
அப்போது அக்கும்பலில் இருந்த ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அவர்கள் அங்கிருந்து கிளம்ப முயன்றபோதும் கை பிடித்து இழுத்துத் துன்புறுத்திய கும்பல், இருவரையும் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.
அச்சிறுமி கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய பிறகே அக்கூட்டம் அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளது. வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஜமுய் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்
. பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.