யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து சிக்கியது
உரிய அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாகாணத்துக்கான சொகுசுப் பேருந்துச் சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய திடீர் சோதனையின்போது பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட குறித்த பேருந்து, உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்குவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கூட்டுச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அதிகார சபையின் போக்குவரத்து அலுவலர், பறக்கும் படைப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இச்சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது அனுமதியின்றி சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்து இடைமறிக்கப்பட்டு, அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த பேருந்து தொடர்பான விடயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பயணிகள் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, சாரதிகள் அல்லது நடத்துநர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, அதுதொடர்பான முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவித்தார்.