எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் வெளியான எதிர்ப்பு
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவுக்கு 1 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என்ற இலங்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கப்பல் நிறுவனமான எக்ஸ் - பிரஸ் ஃபீடர்ஸ் கடுமையாக ஆட்சேபித்துள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கப்பல் கேப்டனையும் உள்ளூர் முகவர்களையும் தங்களின் விசாரணைகள் முடிவதற்கு முன்பே நீதிமன்றம் தண்டித்ததாக நிறுவனம் கூறுகிறது.
கேப்டன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் சிக்கித் தவித்து வருகிறார் எனவும் அவர் வீடு திரும்பவோ அல்லது தொழில் புரியவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து கொழும்புக்கு அருகே மூழ்கியது, இதனால் பிளாஸ்டிக் துகள்கள் சிதறி இலங்கையில் மிக மோசமான கடல் மாசுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுத்தம் செய்வதற்கும் கடற்றொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது.
இலங்கை உட்பட பிற நாடுகளில் உள்ள துறைமுகங்கள் கசிந்த கொள்கலனை அகற்ற அனுமதித்திருந்தால் தீ விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது.
உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர்கள் பொறுப்பேற்கவில்லை என்றும் அது கூறுகிறது. மிகப்பெரிய 1 பில்லியன் டொலர் கட்டணம் உலகளாவிய வர்த்தகத்தை பாதிக்கும் எனவும் இலங்கைக்கான கப்பல் செலவுகளை அதிகரிக்கும் என்றும் எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் எச்சரிக்கிறது.
எனவே சுற்றுச்சூழலுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் உதவும் நியாயமான முடிவுகளை வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோருகின்றது.
[4OAFATC ]