மன்னார் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்
பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்று (23) வியாழக்கிழமை பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை...
மன்னார் மாவ்டத்தில் பிரபலமான அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாக தெரிவித்து தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர்.
தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் கூறுகையில், இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளோம்.
இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.