யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்புப் போராட்டம் இன்று (11) 17ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை மீண்டும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டகாலமாகத் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான உரிய தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று 17ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த முதியவர் ஒருவர், தாங்கள் கடந்த 36 ஆண்டுகளாகத் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வருவதாகத் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தங்களை இதுவரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.
மேலும், “எங்கள் இறப்பாவது எங்கள் சொந்த மண்ணில் நிகழ வேண்டும் என்பதே எமது இறுதி ஆசையாக உள்ளது” என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
கடும் வெயிலிலும் தொடர்ந்த போராட்டம்
இதேவேளை, கடும் வெயிலுக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கி, நிழலான இடத்தில் அமர வைத்துள்ளனர்.
இருப்பினும், குறித்த பெண் போராட்டத்திற்கு ஆதரவாக அங்கு தொடர்ந்து இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது பூர்வீக நிலங்களை மீளப்பெற்று, சொந்த மண்ணில் மீள்குடியேறுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படும் வரை தமது கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.