109 புலம்பெயர்ந்தோரை பலியெடுத்த படகு விபத்து ; ஜிபூட்டியிலிருந்து ஏமன் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிப் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்ததில், 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 109 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 116-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
ஜிபூட்டியின் துறைமுக நகரமான ஓபோக்கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில், கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக உயிர் பிழைத்தவர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி IOM தெரிவித்துள்ளது.

மருத்துவ உதவிகள்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அடங்குவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், 80-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து ஜிபூட்டி அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஆபத்தான கடல் வழிப் பாதைகளில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக IOM தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து ஏமன் நோக்கிப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் பயன்படுத்தும் கடல் வழிப் பாதைகளில் இடம்பெறும் இத்தகைய விபத்துகள், உயிரிழப்புகளுக்கும் காணாமல் போதல்களுக்கும் காரணமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.