யாழில் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை ; நீதி கோரி போராட்டம்
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் மற்றும் செல்வராஜா ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன், அவர்களின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்ற நினைவேந்தலில், நாடளாவிய ரீதியிலிருந்து பல ஊடகவியாலர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஊடாக நீதியை நிலைநாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும் என, வடமராட்சி ஊடக இல்லம் அறிக்கையொன்றை வெளியிட்டு, வலியுறுத்தியுள்ளது.
ஊடகர் தராக்கி சிவராம் கொல்லப்பட்டு 20 வருடங்கள் ஆகியும், கொலையாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், உரிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இதற்கான சரியான பொறிமுறை உருவாக்கப்படாமையும், திட்டமிட்டு அவை தவிர்க்கப்பட்டமையும், உள்ளக விசாரணை மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இலங்கையின் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் சர்வதேச விசாரணையினூடாக அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என வடமராட்சி ஊடக இல்லம் கோரியுள்ளது.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் எனப்படும் தர்மரத்தினம் சிவராம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்ட நிலையில், பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அத்துடன், ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.