தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம் ; தடுப்பூசி விபரங்கள், இருப்பிடங்களையும் கண்காணிக்கவும் நடவடிக்கை
தெருநாய்களின் விபரங்களைச் சேகரித்து முறையாகப் பேணும் நோக்கில், ஹோமாகம பிரதேச சபையின் ஊடாக அவற்றுக்கு மைக்ரோ சிப் (Microchips) பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமையின் ஊடாக, நாய்களின் தடுப்பூசி விபரங்கள், சுகாதார நிலை மற்றும் அவை காணப்படும் இடம் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகளால் பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பாக, தெருநாய் கடித்தல் சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அல்லது வேறு தேவைகளுக்காக, குறித்த நாயின் முழுமையான விபரங்களை அதிகாரிகள் அறிந்துகொள்ள இந்தத் திட்டம் உதவும். நாட்டின் பல பகுதிகளிலும் உரிமையாளர்களற்ற தெருநாய்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் முக்கிய நகரமான காலியிலும் தெருநாய்களின் நடமாட்டம் தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறான தெருநாய்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், ஹோமாகம பிரதேச சபையின் தலையீட்டில் மைக்ரோ சிப்களைப் பொருத்தி தெருநாய்களின் தகவல்களைச் சேகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரேபிஸ் நோயை ஒழிக்கும் நோக்கில் நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தி அவற்றைப் பதிவு செய்யும் வேலைத்திட்டம் அண்மையில் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.