உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி
தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஏற்படவிருந்த உப்பு தட்டுப்பாடு காரணமாக, தொழில்துறை தேவைகளுக்காக 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய கடந்த டிசம்பரில் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அரச துறைக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இன்று வரை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் அளவு 11,890 மெட்ரிக் தொன்கள் ஆகும். இருப்பினும், உப்பு உற்பத்தி உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் இன்று (03) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்படி, இதுவரை அரச துறைக்கு மட்டுமே உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இன்று முதல் தனியார் துறைக்கும் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்குப் பிறகு, உப்பு இறக்குமதியால் சந்தையில் உப்பின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இருப்பினும், சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உப்பு விலை அதிகரித்திருந்தாலும், இறக்குமதி காரணமாக சந்தையில் உப்பு விலையில் அதிகரிப்பு ஏற்படாது என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
இதற்கிடையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, இனி ஒருபோதும் இதுபோன்று இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறினார்.