பொதுமக்களின் பாதுகாப்பை அடகு வைக்கும் தனியார் மருத்துவ ஆய்வகம் முற்றுகை
நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்ட லக்கல பகுதியில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்று முற்றுகையிட்டனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய இரத்த சேகரிப்பு குழாய்களை (blood collection tubes), கழுவி மீண்டும் பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான இரத்த பரிசோதனைக் குழாய்கள்
ஆய்வகத்திற்குள் பெருமளவிலான காலாவதியான இரத்த பரிசோதனைக் குழாய்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தமையும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இத்தகைய செயற்பாடுகள் பொது சுகாதார விதிமுறைகளை மீறுவதுடன், நோயாளிகளுக்கு பாரிய தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய மற்றும் நோயாளிகளின் உயிருடன் விளையாடிய இந்த ஆய்வகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலாப நோக்கத்திற்காக பொதுமக்களின் பாதுகாப்பை அடகு வைக்கும் இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.