எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம்
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவ பகுதியில் இன்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் டீசல் பீப்பாய் ஒன்றின் விலை குறைவாக இருந்த நிலையில், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு டீசல் லீட்டருக்கும் 100 ரூபா வீதம் மானியத்தை வழங்கியதாகவும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் லீட்டருக்கு 70 ரூபா வீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளோம்.
கடந்த காலங்களைப் போலன்றி மிகக் குறைந்தளவு ஊழியர்களுக்கே நியமனம் வழங்கினோம். பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேர் மாத்திரம் புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனம் திறம்பட நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்த விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு விற்க முடியாது எனத் தெரிவித்து விலையை உயர்த்தக் கோருகின்றன.
ஒரு நிறுவனம் டீசல் லீட்டருக்கு 132 ரூபாய் அதிகரிப்பை கோருகிறது. மற்றொரு நிறுவனம் லீட்டருக்கு 116 ரூபா அதிகரிப்பை கோருகின்றது. நாங்கள் அவ்வாறு அதிகரிக்கவில்லை. 70 ரூபாய் நிவாரணத்துடன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
விலை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை விற்பனை செய்ய போவதில்லை என எரிபொருள் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் பழைய ஒப்பந்தங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குகின்றன. அந்த பழைய ஒப்பந்தம் மீண்டும் திருத்தம் செய்யப்படும்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் பணவீக்கச் சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நூல்கள் மீதான வரிகளை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் மானியங்களை வழங்குவதோடு, பொதுமக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைத்து நிவாரணம் வழங்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.