டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்கும் முறையால் தனியார் பேருந்து சேவைகள் முடங்கும் அபாயம்
இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் புதிய முறைமையால், நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 13,000 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. இந்த புதிய முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்பட்டால், தினசரி சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக (6,500 பேருந்துகள்) மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
நாட்டில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவற்றுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப் போதுமான டிப்போக்கள் இல்லை.

இதனால் நீண்ட வரிசைகள் ஏற்படும். டிப்போக்கள் மாலை 5 மணிக்கு மூடப்படுவதால், அன்றைய தினம் சேவையை முடித்துவிட்டுத் திரும்பும் பேருந்துகளுக்கு எரிபொருள் பெற முடியாது. இதனால் மறுநாள் காலை சேவைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.
ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துச் சேவையை முடக்காமல், இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லையெனில் அரசாங்கம் பாரிய மக்கள் எதிர்ப்புக்கும், போக்குவரத்துப் பாதிப்புக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
கியூ.ஆர். முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளுமாறு நான் வலியுறுத்தியிருந்தேன். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழல், நாட்டின் போக்குவரத்துச் சேவையை அரைவாசியாகக் குறைத்துவிடும் எனச் சுட்டிக்காட்டினார்.
பொதுப் போக்குவரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், எரிபொருள் விநியோகத்தில் தகுந்த மாற்றுத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.