திருமணமாகி 6 மாதம்; தப்பிச் செல்ல முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி
கண்டி, பல்லேகலை தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (1) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கண்டி - கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயது விளக்கமறியல் கைதியே உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி 6 மாதம்
சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன, குறித்த கைதி சிறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
7 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் ஒரு வார காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கைதி சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நேற்றிரவே கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவரது குடும்ப உறவினர்களும் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
உயிரிழந்த நபர் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானவர் என்றும், அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன