தீவிரப் புயலாக மாறியது முரசு; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'முரசு' புயல், தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை 5.30 நிலவரப்படி, இந்த புயல் தொகுதி வடக்கு நெட்டாங்கு 13.9°N மற்றும் கிழக்கு அகலாங்கு 81.8°E அருகில் அமைந்திருந்ததாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதி
இந்த தீவிரப் புயலானது வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, இன்று (2) நள்ளிரவுக்கும் நாளை (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை ஊடுருவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதன் காரணமாக அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்திற் கொண்டு வளிமண்டலவியல் திணைக்களம் பின்வரும் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
10N-17N மற்றும் 80E-90E ஆகிய எல்லைகளுக்குட்பட்ட ஆழ்கடற்பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் ஆழ்கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுருத்தியுள்ளது.