வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி உயிரிழப்பு
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை யாய பகுதியை சேர்ந்த சிறைக் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதி இன்று (17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறைக் கைதி
உயிரிழந்த சிறைக் கைதி கடந்த 13ஆம் திகதி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி நேற்று (16) சிறைச்சாலையின் கழிவறைக்குள் சென்று உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அதைக் கண்ட சிறைச்சாலை அதிகாரிகள், கைதியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.