நீர்கொழும்பு சிறை கலவரம் ; STF தலையீடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கடுமையான மோதலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் (STF) உதவியைப் பெறுவதற்கான நடவடிக்கை, மோதல் ஆரம்பமாகி ஒரு நாளுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சன்தன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
'தெரண பிக் ஃபோகஸ்' (Derana Big Focus) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் பொலிஸார் சிறைச்சாலைக்கு வெளியே தயார் நிலையில் இருந்ததாக குறிப்பிட்டார்.
எனினும், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை கிடைக்கும் வரை, சட்ட ரீதியாக சிறைச்சாலைக்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது, கைதிகள் மருந்துப் பண்டகசாலையை உடைத்து அங்கிருந்த மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் போதை நிலையில் வன்முறையாக செயற்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நிலைமை கட்டுப்பாட்டில் இருந்ததாக பதிவுகள் காணப்பட்ட போதிலும், மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் திங்கட்கிழமை காலை நிலைமை மிகவும் மோசமடைந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, சிறைச்சாலை நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் உதவியை கோரும் உத்தியோகபூர்வ கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறித்த கடிதம் திங்கட்கிழமை (06) காலை அனுப்பப்பட்டதன் பின்னரே, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்குள் சென்று நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சன்தன கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.