லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில்... சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்த முன்னாள் சிறைச்சாலை அமைச்சராக இருந்ததன் காரணமாக அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின்படி, கடந்த 31ஆம் திகதி முதல் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தவின் உடல்நிலை தொடர்பில் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து அறிக்கை வரவழைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த கல்லீரல், நுரையீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை விசேட மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லொஹான் ரத்வத்த தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் பேரில் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.