பாகிஸ்தானுடன் புதிய விவசாய கூட்டாண்மை ; பிரதமர் ஹரிணி அமரசூரிய பாகிஸ்தான் விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மருத்துவர் நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவுடன், விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் லால்காந்த, "அரசியல் ரீதியாக இலங்கை மீது எவ்வித தேவையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்காத ஒரு நாடாக பாகிஸ்தான் திகழ்கிறது" எனக் குறிப்பிட்டதுடன், எவ்வித அரசியல் இலாபங்களையும் எதிர்பார்க்காமல் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதற்காக பாகிஸ்தானுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

அத்துடன், அமெரிக்க - ஈரான் மோதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், "பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே விவசாய நாடுகளாக இருப்பதால், பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் உதவக்கூடிய திறன் காணப்படுகிறது.
கால்நடை உற்பத்தியிலும் பால் உற்பத்தியிலும் பாகிஸ்தான் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்த துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவை வளர்ப்பதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார். மேலும், பாகிஸ்தான் சர்க்கரை உற்பத்தி மட்டுமன்றி, காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியிலும் உயர் மட்டத்தில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தமது நாட்டில் சிறந்த தரத்திலான பாஸ்மதி அரிசி வகைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்குப் பொருத்தமான பாஸ்மதி ரகங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பாகிஸ்தான் மிகவும் சுவையான, உயர்தர மாம்பழ வகைகளையும் உற்பத்தி செய்கிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.