விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல நாள் மீன்பிடிக் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் 17ஆம் திகதியளவில் கடும் புயலாக மாறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல்
இதனால், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், பொத்துவில் முதல் அம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.