ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதியுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஜனாதிபதி
ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றும் பல அரபு நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள நேரடித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை தனது ஆதரவைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிபடத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஆதரவாக நின்றதற்காக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த உரையாடல் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.
அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் கண்டிப்பதோடு, இலங்கையின் ஒருமைப்பாட்டை அவருக்கு உறுதிப்படுத்தினேன்.
இலங்கை உறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் நிற்பதுடன், எவ்வகையிலும் உதவத் தயாராக உள்ளது."என பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதல்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.