ஆறாவது நாட்டிற்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக ஒரு வருடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதற்கான விசேட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளார்.
முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு
இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் உரையாடவுள்ளார்.
இலங்கையின் பெரும் பொருளாதார – அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்பதுடன், ஜனாதிபதியாக பதியேற்று எதிர்வரும் 21ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது
இந்நிலையில், அன்றைய தினத்திலேயே பிரதமர் மோடியையும் ஜனாதிபதி ரணில் டெல்லியில் சந்திக்கிறார் என்பது மட்டுமல்லாமல் இருநாட்டு தலைவர்களுக்கும் இந்த சந்திப்பு பரஸ்பரமாக முக்கியமானதாகும்.
சில ஒப்பந்தங்கள் கைச்சாத்து
ஜனாதிபதி ரணிலின் டெல்லி விஜயத்துக்கு முன்னர் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஏற்கனவே இருதரப்புகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் மற்றும் டெல்லி விஜயத்தின் உள்ளடக்கம் போன்றவை குறித்து உரையாடுவதற்காகவே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணிலை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அவர் விஜயம் செய்யும் ஆறாவது நாடாக இந்தியா உள்ளது.
இதுவரை இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், எகிப்து, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.