செம்மணி புதைகுழி தொடர்பான நீதி நிலைநாட்ட ; பிரிட்டன் புலம்பெயர் தமிழர்கள் தமிழர்கள் எழுச்சி
செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் அதேவேளை அம்மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.
செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரிட்டனின் ஆதரவைக்கோரி பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இம்மகஜரில் கையெழுத்திட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களும், தப்பிப்பிழைத்தவர்களும், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் பிரதிநிதிகளுமாகிய நாம், அண்மையில் தமிழர் தாயகத்தில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உங்களுக்கு இந்த மகஜரை எழுதுகிறோம்.
அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாம் ஏற்கனவே அறிந்திருந்த உண்மை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல.
மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓரங்கமேயாகும்.
நாம் பல தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாவோம்.
இன்று நாம் எமக்காக மாத்திரமன்றி, நீதியோ, நினைவுகூரலோ, அங்கீகாரமோ இன்றிப் புதைக்கப்பட்ட மற்றும் அமைதிப்படுத்தப்பட்ட சகலருக்காகவும் குரல் எழுப்புகிறோம்.
எமது அமைப்பானது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதையும், தமிழீழத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றிவருகிறோம்.
அதன் நீட்சியாக இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அதேவேளை இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இருப்பினும் அந்நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவையன்று என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்றாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றல், செம்மணி விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவரல்,
செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் வலியுறுத்தல்,
செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தல், தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தல்,
செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்கல்,
தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களைக் கண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும்.