விமர்சனங்களை முன்வைப்போரை கைதுசெய்வது அரசியலமைப்பிற்கு முரணானது!
ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்போரை கைதுசெய்வது என்பது முற்றிலும் அரசியலமைப்புக்கு புறம்பான செயற்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா (AJITH P. PERERA) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையிலும் அரசசேவைக்குப் பாதிப்பேற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறு நடவடிக்கை எடுப்பதென்பது அரசியலமைப்பின் 14 ஆம் சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு முற்றிலும் முரணானதாகும். எனவே இதனை அறியாமல் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கமாட்டார்.
மாறாக இவ்வறிப்பின் மூலம் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக அரச இயந்திரத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற செயற்பாடுகளின் ஓரங்கமாக அவரும் மாறியிருக்கின்றார்.
அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை மாத்திரமன்றி நாட்டுமக்களின் நலனையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது.
அதுமாத்திரமன்றி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவோ எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாமல் வெறுமனே கருத்துக்களை மாத்திரம் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியாது.
எனவே நாட்டின் பிரஜையொருவர் தனக்கிருக்கின்ற ஜனநாயக உரிமைக்கு அமைவாக வெளியிடுகின்ற கருத்து ஜனாதிபதியையோ அல்லது உயர்மட்ட அதிகாரிகளையோ அவமதிக்கக்கூடிய வகையில் காணப்பட்டாலும் பொலிஸாரால் அவரைக் கைதுசெய்யமுடியாது.
மாறாக எவரேனும் அவ்வாறு கைதுசெய்யப்படும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினால் அவர்களுக்கு அவசியமான இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.
கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.