இராணுவத்தை அனுப்புவோம்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (21) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஆலை இராணுவத்தால் கையகப்படுத்தப்படும்
பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி செயல்படவில்லை என்றால், அரிசி , அரிசி ஆலையின் களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதோடு அரிசி ஒரு தேசிய சொத்து என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்த நியாயமற்ற விதிமுறைகளையும் அமல்படுத்தவில்லை என்று கூறினார்.
எந்தவொரு ஆலை உரிமையாளரும் இணங்கவில்லை என்றால், அந்த ஆலை இராணுவத்தால் கையகப்படுத்தப்படும் என்றும், அரிசி உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
அதேசமயம் எதிர்காலத்தில் அரிசி விற்பனை தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக இருக்க அனுமதிக்கப்படாது எனக் கூறிய ஜனாதிபதி அனுர திசாநாயக்க , “முடிந்தால் மோதி பார்ப்போம்” என்றும் கூறினார்.