மன்னார் வைத்தியசாலை விரிவாக்கம்; ஜனாதிபதி அநுர குமார விஜயம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.
மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளது.

நிர்மாணப்ணியானது 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்ததும், மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லாமல் அவசர விபத்துகள் மற்றும் ஏனைய நிபுணத்துவ சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும்.
இதனுடன் இணைந்ததாக, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.