ஜனாதிபதி அனுர விரைவில் முல்லைத்தீவிற்கு விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதற்கமைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், வடகிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள், துயிலும் இல்லங்களை விடுவிப்புச் செய்தல், வட, கிழக்கில் அதிகரித்துள்ள படையினரின் பிரசன்னம்,
பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வடக்கு, கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசியிருந்தோம்.

அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிக மோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதேவேளை வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடைய மாவட்டங்களாகக் காணப்படுகின்றன.
இந்நிலையில் அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன்.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன்.
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன்.
இந்நிலையில் கூடிய விரைவில் தாம் முல்லைத்தீவிற்கு வருகைதந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியதாகவும் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.