ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய விஜயம்; பல ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறும்!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் இந்திய விபரம் குறித்த உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்பட வில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பார்வையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியமானதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை - இந்திய இணைப்புத் திட்டங்கள்
இதற்கு பிரதான காரணம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இலங்கை - இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய விடயமாக கருதப்படும்.
குறிப்பாக, ரணிலின் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஒப்பந்தம், திருமலை பொருளாதார வலயத் திட்டம், மன்னாரில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் பணியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கியமை உட்பட கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி திட்டமும் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார். இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதேசமயம் , ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் இவ்வாறான அறிவிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையானது இருதரப்பு பேச்சுக்களில் இந்திய முதலீடுகள் தொடர்பில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் விடயங்களாக இருக்கும்.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு
மறுபுறம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை இந்தியா கடந்த காலத்திலிருந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது.
இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு சீனா அனுமதிப்பதற்கும் இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றங்களுக்கு கூட இந்த எதிர்ப்புகள் வழிவகுத்தன.
இந்த டிசம்பர் மாதம் வரை சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் , ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, சீன விவகாரம் மற்றும் இருதரப்பு இணைப்பு திட்டங்களின் எதிர்காலம் போன்ற தலைப்புகள் முக்கியத்துவம் பெற்றும் என நம்மப்படுகின்றது.
அதே போன்று சீன - இந்திய நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், ஜனாதிபதி அனுர தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.