நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர நத்தார் வாழ்த்து
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்குத் தனது நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில், இலங்கையர்களாகிய நாம், அண்மையில் நாடு எதிர்கொண்ட மிகவும் வேதனையான இயற்கை பேரழிவிலிருந்து உறுதியுடன் மீண்டு வரும் ஒரு இக்கட்டான சூழலிலேயே இந்த நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம்
அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே இந்தப் பண்டிகையின் உண்மையான அர்த்தங்களாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
"இக்கட்டான காலங்களில் அயலவர்களைக் கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னத மனிதப் பண்பை இலங்கை மக்கள் அண்மைய அனர்த்தங்களின் போது மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களைத் தமது சகோதர மக்களுக்காகச் சுமந்து சென்ற மக்கள், நத்தாரின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று நான் நம்புகிறேன்," என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இருள் நீங்க வேண்டுமானால் ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மனித சமூகத்தை மீட்கத் தன்னை அர்ப்பணித்து, மரணத்தை வென்ற இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை நம்பிக்கைக்கு உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தமான வேதனையான உண்மைகளை எதிர்கொண்டு, சவால்களை வென்று, ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இறுதியாக, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம் மற்றும் கருணை நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக இது அமைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.