மயக்கமான கர்ப்பிணி பெண்ணை உயிரோடு எரித்த கும்பல் ; 11 மணி நேர சிசிடிவி காட்சிகளால் அம்பலமான பகீர் சம்பவம்
மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள கரதாத் பாரி பகுதியில் கர்ப்பிணி பெண்ணின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தீவிர விசாரணை
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, 11 மணி நேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த தொழில்நுட்ப பகுப்பாய்வின் மூலம் அஹில்யாநகர் மாவட்டம் ஜம்கேடு பகுதியில் உள்ள சப்தசுர் கலாச்சார கலை மையத்திற்கு சந்தேகத்திற்கிடமான வாகனம் சென்றது கண்டறியப்பட்டது.
பீட் மாவட்டம் அருகே நடந்த உள் தகராறின் போது, 31 வயது கர்ப்பிணியான பிங்கி ஹனுமந்த் தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் மயக்கமடைந்த நிலையில் இறந்துவிட்டதாக நம்பிய குற்றவாளிகள், உடலை அகற்றும் சதி திட்டத்தை தீட்டியுள்ளனர்.
பின்னர் காரில் உடலை சுமார் 275 கி.மீ தொலைவுக்கு கொண்டு சென்று, துலே பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற மலைப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை பிடிக்க காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.