மலைப்பகுதியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கிராமத்தினரின் நெகிழ்ச்சி செயல்
இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஷமொலி மாவட்டத்தில் மலைப்பகுதியில் பென் என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த 29 வயதான நிறைமாத கர்ப்பிணி கிரன் தேவிக்கு கடந்த புதன்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளம் காரணமாக கிராமத்தை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டதால் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் குழுவாக இணைந்து கர்ப்பிணி கிரன் தேவியை தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.
கிரன் தேவியை இருக்கையில் அமரவைத்து அந்த இருக்கையை தங்கள் உடலோடு கயிறு மூலம் கட்டி சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்றனர்.
மலை மற்றும் ஆபத்தான ஆற்றுப்பகுதியை கடந்து டிவால் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிரன் தேவியை கொண்டு சென்றனர்.
இவ்வாறான நிலையில், கிரன் தேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.