கார்த்திகை தீபத் திருநாளில் இதை செய்தால் வாழ்வில் வளம் பெருகும்!
கார்த்திகை மாதத்தில், இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களில் கார்த்திகை பொரிக்குத் தனிச்சிறப்பு உண்டு.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆறு தாமரை மலர்களில் விழுந்து, ஆறு குழந்தைகளாக உருவெடுத்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஐதீகத்துடன் இந்தப் பொரி நைவேத்தியம் தொடர்புப்படுத்தப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருநாளில் இனிப்புப் பலகாரம்
நெற்பொரி அல்லது அவல்பொரியுடன் வெல்லப்பாகு, வறுத்த தேங்காய்த் துண்டுகள், கருப்பு எள், பொரிகடலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்புப் பலகாரம், கார்த்திகை தீபத் திருநாளில் இறைவனுக்குப் படைக்கப்படுவது காலங்காலமாகத் தொடர்ந்து வரும் மரபாகும்.
கார்த்திகை மாத வழிபாடுகளில் பொரி மட்டுமின்றி, பாரம்பரியச் சுவை மிகுந்த பலகாரங்களும் கடவுளுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அரிசி மாவு அல்லது கோதுமை மாவில் வெல்லம், நெய் சேர்த்துச் செய்யப்படும் அப்பம், பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை வெல்லத்துடன் சேர்த்துத் தயாரிக்கப்படும் பாயசம் ஆகியவை முக்கிய நைவேத்தியங்களாக இடம் பெறுகின்றன.

மேலும், உப்பு சேர்க்காமல் தயாரிக்கப்படும் கொழுக்கட்டை மற்றும் அதிரசம் போன்ற பாரம்பரிய உணவு வகைகளும், கார்த்திகை தீபம் மற்றும் விசேஷ நாட்களில் பூஜையின் போது இறைவனுக்குப் படைக்கப்பட்டு, குடும்ப நலனுக்காகவும் மங்கலத்திற்காகவும் பிரார்த்திக்கப்படுகின்றன.
விரத நாட்களும் சத்தான பிரசாதங்களும்
கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருக்கும் பக்தர்கள், நாள் தோறும் எளிய மற்றும் சத்தான உணவுகளை இறைவனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
குறிப்பாகக் கார்த்திகை புதன்கிழமைகளில் பெருமாள் மற்றும் புதன் பகவான் வழிபாடுகளின் போது பச்சைப்பயறு நைவேத்தியமாகப் படைக்கப்படுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

இதோடு, வாழைப்பழம், கற்கண்டு, உலர் திராட்சை மற்றும் தேங்காய் போன்ற எளிய பொருட்களையும் பூஜையின் போது சமர்ப்பித்து, அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆன்மிகப் பலன்கள் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்