இம்ரான் கானை விடுவிக்கக் எதிர்க்கட்சி கோரிக்கை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை விடுவிப்பதற்குக் கட்சி பேதமின்றி அனைவரும் தலையிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா இன்று (நவம்பர் 21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்ரான் கானை விடுவிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுக்கப்பட்டமை குறித்துச் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; "இம்ரான் கான் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மட்டுமல்ல; முழு உலகமும் நேசிக்கும் ஒரு கிரிக்கெட் வீரர். அவர் எமது நாட்டிற்குப் பெரிதும் உதவியவர். இன்று இங்குள்ள பிரச்சினை நாடுகளுக்கு இடையிலான ஒன்றல்ல.
எமது கிரிக்கெட் விவகாரங்களின்போதும் அவர் அளப்பரிய உதவிகளைச் செய்தார். குறிப்பாக, நாம் உலகக் கிண்ணத்தை வென்ற தருணத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பு மகத்தானது. எனவே, இராஜதந்திர நட்புறவுகளைப் பயன்படுத்தி, மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவிப்பதற்கு ஆளும், எதிர்க்கட்சி பேதமின்றி அனைவரும் தலையிட வேண்டும்.
இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்குப் பின்னால் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினை உள்ளது. மனித உரிமை என்பது ஒரு நாட்டிற்குள் மட்டும் வரையறுக்கப்பட்ட விடயமல்ல; எங்காவது ஒரு இடத்தில் மனித உரிமை மீறப்பட்டால், அது முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என அவர் சுட்டிக்காட்டினார்.