சீனப் பிரஜையின் தாக்குதலில் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காயம்
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் மாலபே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பிரஜையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தனக்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரியதையடுத்து, காவல்துறையினர் சட்ட வைத்திய படிவங்களை வழங்கி அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த சீனப் பிரஜை திருமணம் செய்துள்ள இலங்கைப் பெண்ணின் சகோதரரைச் சந்திப்பதற்காகவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் மைத்துனரான குறித்த நபர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மிக நெருங்கிய நண்பர் என்பதோடு, அவர் நீண்டகாலமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்குள் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் குறித்த சீனப் பிரஜைக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் முற்றியதையடுத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் செய்த முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட மாலபே காவல்துறையினர், சந்தேகநபரான சீனப் பிரஜையைக் கைது செய்துள்ளனர்.