யாழ் பேருந்து பயணத்தில் பெண்ணுக்கு நடந்த சம்பவம்; சாரதி நடத்துநருக்கு குவியும் பாராட்டு!
யாழ்ப்பாணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை மீட்ட சாரதியும் நடத்துநரும் அதனை உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று(23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சாரதி மற்றும் நடத்துநரின் நேர்மைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை
பருத்தித்துறை வீதியிலிருந்து வட்டுக்கோட்டை நோக்கிச் செல்லும் 767ஆம் வழித்தடத்தைச் சேர்ந்த 4241 இலக்க இ.போ.ச.பேருந்தின் மதிய சேவையில் குறித்த பெண் பயணித்துள்ளார். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், மற்றுமொரு உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற பின்னரே தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவர் அவதானித்துள்ளார். சங்கிலியை வழியெங்கும் தேடியும் கிடைக்காத நிலையில்,மீண்டும் வட்டுக்கோட்டையிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிப்பதற்காக அதே பேருந்தில் ஏறியுள்ளார்.
இதன்போது தனது தங்கச் சங்கிலி காணாமல் போனதை பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர்கள், “நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்து பத்திரமாக வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்து, சங்கிலியை உடனடியாக உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து பேருந்து பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் சுத்தம் செய்யப்பட்டபோது, சங்கிலியின் ‘எஸ்’ வடிவ இணைப்புப் பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனையும் உரிய பெண்ணிடம் ஒப்படைத்து, நகையின் அனைத்து பகுதிகளும் முழுமையாக அவரிடம் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் செயற்பாடு பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த காலத்திலும், பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமல் அதனை உரியவரிடம் ஒப்படைத்த இந்த இரு ஊழியர்களின் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயம் பாராட்டுக்குரியது என பயணிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.