மருத்துவமனையில் பொறியாளர் உயிரிழப்பு; இலங்கை பெண்ணின் வெளிநாட்டு கணவன் கைது
தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தலங்கம, வெலி பாரா பகுதியைச் சேர்ந்த 58 வயது சிவில் பொறியாளர் ஆவார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கொரிய நாட்டவர், இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வெலி பாரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

வாக்குவாதத்தின்போது தாக்குதல்
தென் கொரியாவிற்குச் செல்ல விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு இவர் கொரிய மொழியைக் கற்பித்து வருகிறார்.
உயிரிழந்த பொறியாளரும் சந்தேகநபரான கொரிய நாட்டவரும் அண்டை வீட்டார்களாக இருந்ததாகவும், ஒரு சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கொரிய நாட்டவர் பொறியாளரைத் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவில் பொறியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட கொரிய நாட்டவர் குறித்து தலங்கம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.