மின் விநியோகத்தில் சிக்கல்? எரிபொருள் நெருக்கடிக்கு புதிய தீர்வு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடிகளைச் சமாளிக்கும் நோக்கில், 11 தனியார் நிறுவனங்கள் சுயாதீனமாக எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு வலுசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ; கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு பெண்கள் ; புதிய சந்தேகங்கள்
அரச முகவர் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கையிருப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம். உதயங்க ஹேமபால விடுத்துள்ள அறிவிப்பின்படி, செல்லுபடியாகும் 'பங்கர்' உரிமம் கொண்ட இந்த நிறுவனங்கள் மார்ச் 17 முதல் மூன்று மாத காலத்திற்கு எரிபொருளை விற்பனை செய்ய முடியும்.

அவ்வாறு விற்பனை செய்யப்படும் எரிபொருளை ஏற்றுமதியாளர்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட சுற்றுலா சேவை வழங்குநர்கள், உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் ஏனைய கைத்தொழில் துறையினர் வாங்குவதற்குத் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கான கொடுப்பனவுகள் முழுமையாக அமெரிக்க டொலர்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
உள்நாட்டுப் போக்குவரத்துத் துறை இந்த விசேட வசதியைப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா ஐஓசி, லங்கா மரைன் சர்வீசஸ், லங்கா மெரிடைம் சர்வீசஸ், லங்கா பங்கரிங் சர்வீசஸ், மொசெட்டி இன்டர்நேஷனல், இன்டர் ஓஷன் எனர்ஜி, மெக் மரைன், சினோபெக் ஒயில் லங்கா, ஸ்பென்ஸ் சீ ஹார்ஸ் மரைன், செர்டாகா குளோபல், ஹாக்ஸ் கொழும்பு மற்றும் பிட்ஸ் ஒயில் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஒருவர், இலங்கையிடம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற உச்சகட்ட வெளிநாட்டு கையிருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இம்முறை மகா பருவ அறுவடை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை விலைக்கு ஏற்ப எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானியங்கள் மூலம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் சிக்கல் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு எரிபொருள் ஒருபுறமிருக்க, நிலக்கரி விநியோகத்திலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 300,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான அவசர டெண்டர் இந்தியாவின் 'தரஞ்ஜோத் ரிசோர்சஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார் 9 மில்லியன் டொலராகும். லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட சில நிலக்கரி கப்பல்கள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.
இதனால் நிலக்கரியை எரிக்கும்போது அதிகளவான சாம்பல் உருவாவதுடன், மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இரவு நேர மின்சாரத் தேவையின் போது தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தில் 148 மெகாவாட் முதல் 176 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தனியார் துறைக்கு எரிபொருள் விற்பனை செய்ய அனுமதி வழங்கும் இந்த முடிவானது, இலங்கை வர்த்தக சம்மேளனம் கடந்த மார்ச் 11 அன்று முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பொருளாதார நெருக்கடியின் போதும் இவ்வாறான ஒரு நடைமுறை வெற்றிகரமாகக் கையாளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.