புடவை கட்டும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய் வகைகளாக மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் உள்ளன. இருப்பினும், புடவை கட்டும் பெண்கள் 'புடவை புற்றுநோய்' (Saree Cancer) எனப்படும் ஒரு அரிய வகை தோல் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்திலும் உள்ளனர் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Saree Cancer என்கிற பெயர், மருத்துவ ரீதியாக அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்ட பெயர் இல்லை. மேலும், பல ஆண்டுகளாக இடுப்பில் சேலை இறுக்கமாக கட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனையால்தான் இது ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாதிப்பு ஏன் உண்டாகிறது?
இப்படி சேலையை இடுப்பில் இறுக்கமாக கட்டுவதால், Squamous Cell Carcinoma எனும் அறிய வகை தோல் புற்றுநோய் ஏற்படுவதாகவும் ஒரே இடத்தில், தொடர்ந்து அழுத்தம் மற்றும் உராய்வு ஏற்படுவதால் இந்த பிரச்சனை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பெண்களின் சேலை முடிச்சு அல்லது பாவாடை கயிறு தொடர்ந்து ஒரே இடத்தில் தேய்ப்பதால் அந்த பகுதியில் இருக்கும் தோல் மெதுவாக சேதமடையுமாம். இதனால் இந்த இடத்தில் ரத்த ஓட்டம் குறைவது மட்டுமன்றி, அங்கு ஆறாத புண்கள் அல்லது வடுக்களும் ஏற்படுமாம். இதுவே, சில நேரங்களில் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறனர்.
உடலை மோசமான சுகாதாரத்தில் வைத்துக்கொள்வது, அதிகப்படியாக வியர்வை சுரப்பது, எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவது, சருமத்தில் இருக்கும் காயங்களை அலட்சியப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இந்த பிரச்சனை அதிகரிக்கக்கூடும் .

எச்சரிக்கை அறிகுறிகள்
இடுப்பு பகுதியில் தோல் கருமையாக மாறுவது, அரிப்பு அல்லது அதிகளவு எரிச்சல் ஏற்படுவது, இடுப்பு பதியில் தோல் தடிமனாக மாறுவது உள்ளிட்டவை இதன் ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், நீண்ட காலமாக ஆறாமல் இருக்கும் புண், புண்ணிலிருந்து ஏற்படும் ரத்தக்கசிவு, பாதிக்கப்பட்ட இடத்தில் வலி ஏற்படுதல், கட்டி ஏற்படுதல் உள்ளிட்ட நிலைமை பிரச்சனை தீவிரமடைந்ததை குறிக்கிறது. இந்த சமயத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

புடவை புற்றுநோய் எப்படி தடுப்பது
புடவை கட்டும் பெண்கள், சேலை அல்லது பாவாடை கயிற்றை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும். தினமும் ஒரே இடத்தில் சேலை கட்ட முடிச்சு போடாமல், வெவ்வேறு இடங்களில் மாறி மாறி கற்ற வேண்டும்.
இடுப்பு பகுதியை சுத்தமாகவும், வியர்வை இல்லாமலும் வைத்திருத்தல் வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த நிலையில் வைத்துக்கொள்வதும் நன்று. மென்மையான மற்றும் காற்றோட்டமான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.
சேலை புற்றுநோய், அரிதான ஒன்றுதான். ஆனால், இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது தீவிரமாக மாறக்கூடியதாகவும் மாறிவிடும். சரியான ஆடை பழக்கத்தின் மூலமாக இதை எளிதாக தடுக்க இயலும்.