இலங்கையில் போனி குதிரைகளால் பெரும் அவதிப்படும் சுற்றுலா பயணிகள் ; விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு
நுவரெலியா பகுதியில் சுற்றித்திரியும் போனி குதிரைகளை (ponies) அவற்றின் உரிமையாளர்கள், அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில், அவற்றை மீட்க ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் மேயர் தெரிவித்தார்.
குறிப்பாக நுவரெலிய ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யும் போனி குதிரைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும், அவைகள் கவனிக்கப்படாமல் சுற்றித் திரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றித்திரியும் போனி குதிரைகள்
சில நோய்களுக்குள்ளாகும் போனி குதிரைகளுக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், போனி குதிரைகள் சுற்றுலாப் பயணிகளை கடிப்பதாகவும், இது தொடர்பாக நுவரெலியா காவல்நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பராமரிப்பின்றி சுற்றித்திரியும் போனி குதிரைகள் நுவரெலியா மாநகர சபை ஊழியர்களால் பராமரிப்புக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
எனவே, குறித்த போனி குதிரைகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாநகர சபையின் நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்கும் உரிமையாளர்களுக்கு மட்டும் போனி குதிரைகள் விடுவிக்கப்படும் எனவும், ஏனைய போனி குதிரைகளை ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் மேயர் தெரிவித்தார்.