பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி சாத்தியமா? ஆதரவு அரசியலில் புதிய திருப்பம்
தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெறுவதில் தவெக தலைவர் விஜய் பல்வேறு அரசியல் சவால்களை சந்தித்து வருகிறார். தேவையான 118 இடங்களைப் பெற முடியாத நிலையில், மாற்றுக் கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் ஆதரவை பெற ராகுல்காந்தியிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆதரவுக்கு தடை இல்லை என்றாலும், முழுமையான முடிவுகள் வெளியான பின்னர் விவாதிக்கலாம் என ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பின்னர், கட்சியின் உள்புற ஆலோசனைகளில், தவெக அரசில் நேரடியாக பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு வழங்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக ஆதரவு கிடைக்கும் சூழலில், அதே கூட்டணியில் விசிக இருப்பது சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இடதுசாரி கட்சிகள் தங்களின் கொள்கைக்கு அமைவாக, ஆட்சியில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் தொடர்பு கொள்ளும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டாலும், அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவர் ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டாலும், சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அதிமுகவின் ஆதரவை நாடுவது குறித்தும் தவெக வட்டாரத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆனால், இது எதிர்மறை அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதில் கவனம் செலுத்தி முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் பரிமாற்றங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேவையான ஆதரவுகளைப் பெற்று ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.