வங்கி அதிகாரி எனக் கூறி விடுதியில் மோசடி ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்
விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதி ஒன்றுக்கு சென்ற குறித்த சந்தேகநபர், தன்னை தனியார் வங்கியொன்றின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இரவு விருந்து உபசரிப்புக்காக பின்னர் ஒரு குழுவினர் வருகை தரவுள்ளதாகக் கூறிய அவர், விடுதியில் பெருமளவு உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவில் காணப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேகநபர், அங்கிருந்த பல பொருட்களை திருடிக்கொண்டு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விடுதி நிர்வாகத்தினரால் ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், இதே நபர் சினமன் கார்டன்ஸ், பேலியகொட மற்றும் நுண்கொடை உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதேபோன்ற திருட்டு மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபரை அடையாளம் காணும் வகையில் அவரது புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரின் அடையாளம் அல்லது அவர் தங்கியிருக்கும் இடம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591561 என்ற தொலைபேசி இலக்கத்திலும் அல்லது ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 011-2433829 ஊடாகவும் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விடுதி உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வளாகங்களுக்கு வருகை தரும் பரிச்சயமற்ற நபர்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, தங்களை வங்கி அதிகாரிகள் அல்லது ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே முக்கியமான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரை விரைவில் கைது செய்து, இதுபோன்ற சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.