தமிழர் பகுதியில் பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த தாத்தா ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி மாற்றம்
12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.