வெலிகம கொலை ; கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல், பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பாக, அனுராதபுரம் கெக்கிராவ பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் பற்றிய மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில், துப்பாக்கிதாரியின் மனைவி, துப்பாக்கிதாரியை அழைத்துச் சென்ற உந்துருளியை செலுத்திய நபர் மற்றும் பதுங்குவதற்கு உதவிய நபர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி காயம்
பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், துப்பாக்கிதாரியின் பிள்ளை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் மோதலில் ஈடுபட்டதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.
அத்துடன், குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி, சுமார் ரூ. 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின், ஐஸ் மற்றும் போதைப்பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோதலின்போது, அங்கிருந்து தப்பியோடிய துப்பாக்கிதாரியை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பி ஓடிய சந்தேக நபரின் அடையாளங்கள் அடங்கிய பொது அறிவிப்பையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தப்பி ஓடிய ஹக்மன பரணலியனகே நுவன் தாரக்க என்ற நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தநபரின் வலது கையில் ஆங்கிலத்தில் ANURADA என்றும், இடது கையில் "ஹித்துமதே ஜீவிதே" என்றும் பச்சை குத்திய அடையாளங்கள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவரை பற்றிய தகவல் தெரிந்திருப்பின், 071 859 8888 (WhatsApp) அல்லது 011 233 7162, 071 859 2087 ஆகிய எண்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.